| ADDED : நவ 25, 2025 06:45 AM
பல்லடம்: பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், திங்கள்தோறும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தையின் ஒரு பகுதியில் தாட்கோ நிர்வாகம், 18 கடைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வார சந்தை வியாபாரிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக வார சந்தையில் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு பகுதிகளில் இருந்து கடை அமைக்கும் வியாபாரிகள் பலர், இதுதான் வாழ்வாதாரம் என்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். திடீரென வார சந்தையின் ஒரு பகுதியில், தாட்கோ கடைகள் அமைப்பதாக கூறுகின்றனர். இதனால், 60க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் உள்ள தாட்கோவுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்ட, சமீபத்தில் தான் பூமி பூஜை நடந்தது. ஆனால், அந்த இடத்தை தவிர்த்து, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், சந்தை வளாகத்தில் தாட்கோ கடைகள் கட்ட திட்டமிட்டுள்ளனர். எங்க ளின் வாழ்வாதாரம் பாதித்தால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை. எனவே, சந்தைக்குள் தாட்கோ கடைகள் கட்ட அனுமதிக்க கூடாது இவ்வாறு, அவர்கள் கூறினர். பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள், தாட்கோ கடைகள் அமைக்க தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்,எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வியாபாரிகள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக, நேற்று மாலை, 3.30 மணி வரை வாரச்சந்தை செயல்படவில்லை.