கூகுள் பேவில் பணம் செலுத்தி விட்டதாகதுணிக்கடையில் மோசடி; 4 பேர் கைது
'கூகுள் பே'வில் பணம் செலுத்தி விட்டதாகதுணிக்கடையில் மோசடி; 4 பேர் கைதுபெரணமல்லுார்:'கூகுள் பே'வில் பணம் செலுத்தி விட்டதாக, துணிக்கடை உரிமையாளரிடம் மோசடி செய்த, 4 பேரை, பெரணமல்லுார் போலீசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் பஜார் வீதியில், செய்யாறை சேர்ந்த ராஜசேகரன், 43, 'ஆண்கள் ஆடையகம்' என்ற ரெடிமேட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அங்கு வந்த, 4 வாலிபர்கள், டி-சர்ட், பேண்ட், சர்ட்ஸ் என, 5,500 ரூபாய்க்கு துணி வாங்கினர். பின்னர் அவர்கள், 'கூகுள் பே'வில் பணம் செலுத்துவதாக கூறி, மொபைல்போனில் பணம் செலுத்தியதாக வந்த மெசேஜை, கடை உரிமையாளரிடம் காண்பித்து விட்டு புறப்பட்டு சென்றனர். ஆனால், தன் வங்கி கணக்கிற்கு பணம் வராததால், கடை உரிமையாளர் ராஜசேகரன் அதிர்ச்சியடைந்தார். ஏமாற்றிய வாலிபர்களை பைக்கில் துரத்தி சென்றும், பிடிக்க முடியவில்லை. அவர்கள் செல்லும் வழியில் எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த மக்களிடம், மொபைல்போன் மூலம் தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் பைக்கில் தப்பிய, 4 பேரையும், ராஜசேகரன் மடக்கி பிடித்து, பெரணமல்லுார் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், செய்யாறு அடுத்த நமத்தோடு பகுதியை சேர்ந்த தமிழரசன், ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த சுரேந்தர், 19, விக்னேஷ், சென்னை போரூரை சேர்ந்த விக்னேஷ்வரன், என தெரிந்தது. அவர்கள் 'கூகுள் பே' மூலம், துணிக்கடை உரிமையாளருக்கு பணம் அனுப்பாமல், அவர்களது மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டு, அந்த மெஜேஜை, கடை உரிமையாளர் ராஜசேகரன் கணக்கிற்கு பணம் அனுப்பியதுபோல், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 3 பைக் மற்றும், 4 மொபைல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.