தி.மலை கோவில் முன் கார் நிறுத்தம்; தட்டிக் கேட்ட போலீஸ் மீது தாக்கு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கார் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்வதில்லை. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கான்ட்ராக்டர் சதீஷ் என்பவர் நேற்று தன் குடும்பத்தினருடன், இரு சொகுசு காரில் திருவண்ணாமலை வந்து, ராஜகோபுரம் முன் பக்தர்கள் செல்லும் வழியில் காரை, பார்க்கிங் செய்திருந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரின் செயலை எதிர்த்தனர்.கோபமடைந்த சதீஷ் மற்றும் அவருடன் வந்திருந்த விஜய், அனிருத் ஆகியோர், தட்டி கேட்ட ஆட்டோ டிரைவர் சங்கரை சரமாரியாக தாக்கினர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கார் கண்ணாடியை உடைத்து சதீஷ் உள்ளிட்ட மூவரையும் தாக்க முயன்றனர். அவர்கள் காரின் கதவை சாத்திக் கொண்டு தப்பித்தனர்.திருவண்ணாமலை டவுன் போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது, சதீஷ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசாரை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், திருமஞ்சன கோபுரம் எதிரில், போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருந்த எஸ்.ஐ., பாலாஜியிடம், திருவண்ணாமலை மேற்கு கோபுர தெருவை சேர்ந்த ராமு, 35, என்பவர் மது போதையில், தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றார். அவரை, திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.