| ADDED : ஜூலை 03, 2024 02:03 AM
லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, வானதிரையான்பாளையத்தைச் சேர்ந்தவர் மரிய அலெக்ஸாண்டர் -- சுடர்மணி தம்பதி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். அதில், மூத்த மகள் பிபிக்ஷா, 12, புதுார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, பள்ளிக்கு புறப்பட்ட சிறுமி, வானதிரையான்பாளையம் வழியாக, விரகாலுார் - சத்திரம் சென்ற அரசு பஸ்சில் ஏறினார்.பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தச் சிறுமி, பஸ் படிக்கட்டில் நின்றதாகக் கூறப்படுகிறது. வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, சிறுமி, ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் சிறுமியின் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிறுமி, திருச்சி மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் தங்கதுரை, 50, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.