| ADDED : ஏப் 18, 2024 12:43 AM
திருச்சி:லால்குடி அருகே, குமுளூர் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, குமுளூர் கிராமத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் பலமுறை தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஒரு மாதத்திற்கு முன், சாலை மறியல் செய்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சு நடத்தி, தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை 8:00 மணிக்கு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், திருச்சி - லால்குடி சாலையில் மூன்று மணி நேரத்துக்கு மேலாக மறியல் நடந்ததால், போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களை சமாதானப்படுத்தி கலைத்தனர்.