ரயில் நிற்கும் முன் இறங்கிய இன்ஜி., மாணவர் பரிதாப பலி
மணப்பாறை,: ரயில் நிற்கும் முன் இறங்கிய இன்ஜினியரிங் மாணவர், தண்டவாளத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்தார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை, முத்தன் தெருவைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் அஜ்மீர். இவரது மகன் ஷேக் அப்துல்லா, 20; கோவை தனியார் கல்லுாரியில் இன்ஜி., படித்து வந்தார். நேற்று முன்தினம் கோவையில் இருந்து வீட்டுக்கு வர, திண்டுக்கல் வரை பஸ்சில் வந்த அவர், திண்டுக்கல்லில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மணப்பாறை வந்தார்.நேற்று இரவு, 7:30 மணியளவில் ரயில் மணப்பாறை ஸ்டேஷன் வந்தபோது, ரயில் நிற்கும் முன்னே ஷேக் அப்துல்லா இறங்க முயன்ற போது, கால் இடறி விழுந்தவர், பிளாட்பாரத்திற்கும், ரயில் பெட்டிக்கும் இடையே விழுந்தார்.அப்போது ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.