| ADDED : மே 13, 2024 05:46 AM
விழுப்புரம்: பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு 2.51 சதவீதம் கூடுதலாக 93.17 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது.கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், விழுப்புரம் மாவட்ட அளவில் 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில், மாநில அளவில் 24வது இடத்தில் இருந்து, 10ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததற்கு காரணமான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.