விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் மகன் ஏசுராஜ், 25; பி.எஸ்சி., பட்டதாரி. கடந்த மார்ச் 19ம் தேதி இவரது மொபைல் போனில் டெலிகிராம் ஐ.டி., மூலம் பகுதிநேர வேலை, தொடர்புக்கு என ஒரு லிங்க் வந்துள்ளது.அதை தொடர்பு கொண்ட போது, சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்ம நபர் கூறியதைக் கேட்டு, ஏசுராஜ், கடந்த 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை மர்ம நபர் பணம் அனுப்ப கூறிய, வங்கி கணக்குகளுக்கு 7 லட்சத்து 17 ஆயிரத்து 300 ரூபாயை மொபைல் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். பின், அவருக்கு சேர வேண்டிய பணம் வராததை கேட்ட போது, மர்ம நபர் மேலும் அதிகமாக பணம் கேட்டுள்ளார். இதன் பின்தான் ஏசுராஜ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மற்றொரு சம்பவம்
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கரன் மகன் சந்திரகாந்த், 33; பி.இ., பட்டதாரி. இவரது மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், டிரேடிங்கில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது பற்றி மெசேஜ் மற்றும் லிங்கை அனுப்பியுள்ளார்.அதன்பேரில் சந்திரகாந்த் கடந்த ஏப்., 12ம் தேதி முதல் கடந்த 27ம் தேதி வரை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் 24 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் திரும்ப பெற்றுள்ளார். மீதி பணத்தை சந்திரகாந்த் எடுக்க முயன்ற போது, மர்ம நபர் அதிக பணத்தை கேட்டுள்ளார். அப்போது தான் சந்திரகாந்திற்கு, 8 லட்சத்து 500 ரூபாயை இழந்தது தெரியவந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.