| ADDED : ஆக 08, 2024 12:33 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரியை ஆன்லைன் மூலம் ஏமாற்றி ரூ.3.38 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த பள்ளிதென்னல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் விஜயகாந்த்,31; பொறியியல் பட்டதாரி. இவரின் மொபைலுக்கு கடந்த ஜூன் 18 ம் தேதி, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் டெலிகிராம் ஐ.டி., மூலம் பகுதிநேர பணியென கூறி ஒரு லிங்க் வந்துள்ளது. இந்த லிங்கினுள் சென்ற விஜயகாந்த், தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை உருவாக்கியுள்ளார்.பின், ஒரு மொபைல் எண் மற்றும் டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜயகாந்திடம் எப்படி சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் செய்து அதிக லாபம் பெறுவது பற்றி கூறியுள்ளார். இதை நம்பி, விஜயகாந்த், கடந்த ஜூன் 19 ம் தேதி ரூ.10,000 செலுத்தி ரூ.17,295 திரும்ப பெற்றுள்ளார். தொடர்ந்து இவர், தனது மற்றும் இவர் மனைவி வாணியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்ட ஜிபே மூலம் மர்ம நபர் அனுப்பி வைத்த வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.3,38,201 பணத்தை அனுப்பியுள்ளார். டாஸ்க் முடித்தும் விஜயகாந்திற்கு சேர வேண்டிய தொகை வராத நிலையில், கேட்ட போது மர்ம நபர் மேலும் பணம் கேட்ட போது தான் பணத்தை இழந்த விஷயம் தெரியவந்துள்ளது.விஜயகாந்த் புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.