| ADDED : ஜூலை 22, 2024 01:52 AM
வானுார் : வானுார் அருகே முயல் மற்றும் பறவைகளை வேட்டையாட முயன்ற 6 பேரை திண்டிவனம் வனத்துறையினர் கைது செய்து, நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சிலர் முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.ஒழிந்தியாப்பட்டு - கீழ்புத்துப்பட்டு சாலையில் மாத்துார் சந்திப்பில் பறவைகளை வேட்டையாட முயன்ற 6 பேர், வனத்துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் புதுச்சேரி கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்திவேல், 22; அர்ஜூனன், 21; மணிகண்டன், 21; விஜயகுமார், 19; விஜய், 20; பிரகாஷ், 21; என்பதும், வானுார் மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும், விவசாய நிலப்பரப்பிலும், முயல்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 250 கிராம் வெடி மருந்து, 200 கிராம் வெடி மருந்து நிரப்பிய தோட்டாக்கள் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.