உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்

மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர் நியமிக்கப்பட்டுள்ளது, தி.மு.க., நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த அமைச்சர் மஸ்தான் மீது பல்வேறு சர்ச்சைகள் தொடர்ச்சியாக எழுந்தது. இதனால், அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியை கட்சி தலைமை அதிரடியாக பறித்தது.

ஆதரவாளருக்கே பதவி

இதையடுத்து, அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரான டாக்டர் சேகர், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும், அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சி பதவிகளை, அவரின் தீவிர விசுவாசிகளுக்கே கட்சி தலைமை அளித்தது.அதே பாணியில் தற்போதும், அமைச்சர் மஸ்தானிடமே பரிந்துரையை பெற்று, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் சேகரை கட்சி தலைமை நியமித்துள்ளது. இதனால், மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என காத்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி மற்றும் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

வெடித்தது கோஷ்டி பூசல்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம சிகாமணி சென்னையிலிருந்து வந்தபோது, விழுப்புரம் எல்லையில் தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு அளித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பல இடங்களில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அதேசமயத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சேகர், சென்னையிலிருந்து திண்டிவனம் வந்தபோது, கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவில்லை. சில இடங்களில் அவருக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டது.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் பலர், தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கவுதம சிகாமணிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், வடக்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள சேகருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கட்சிக்கு நல்லதல்ல

வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமிக்கப்பட்டதால், கட்சி வளர்வதற்கு பதிலாக, அனைத்து தொகுதிகளிலும் கோஷ்டி பூசல் தலைதுாக்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள சூழலில், இது, கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என, மூத்த தி.மு.க., நிர்வாகிகள் கவலையுடன் தெரிவித்தனர்- நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை