அப்பாடா... தப்பியது அமைச்சர் பதவி... ஆதரவாளர்கள் நிம்மதி பெருமூச்சு
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்கிற ரீதியில் அமைச்சர் பதவி தப்பியதால் அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.மரக்காணம் கள்ளச்சாரய சம்பவத்தின் போது, கள்ளச்சாராய வியாபாரிக்கு அமைச்சர் மஸ்தான் கேக் ஊட்டும் போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் திண்டிவனத்தில் 13 நகர மன்ற கவுன்சிலர்கள் அமைச்சர் மஸ்தானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். அமைச்சரின் குடும்பத்தினர் அரசு நிர்வாகத்தில் தலையீடுவதாக அரசு அதிகாரிகள் சிலரே தி.மு.க., தலைமைக்கு போட்டு கொடுத்தனர். அத்துடன் சீனியர் அமைச்சர் பொன்முடியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததும் அமைச்சர் மஸ்தான் மீது தலைமையின் அதிருப்தியை அதிகப்படுத்தியது.இதன் காரணமாக முதலில் அமைச்சர் மஸ்தானின் தம்பி காஜா நஜீரின் செஞ்சி நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அடுத்து மருமகன் ரிஸ்வானின் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பதவியும், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த மகன் மொக்தியார் பதவியும் கட்சி தலைமையால் பறிக்கப்பட்டது.இதனால் குடும்பத்தினர் பதவி பறிக்கப்பட்ட சில நாட்களில் அமைச்சர் மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்ற பேச்சு இருந்தது. அந்த நேரம் லோக்சபா தேர்தல் வந்ததால் பதவி பறிப்பு தள்ளி போனது.லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரும் தலைமை சமாதானம் ஆகவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சரான வேலுவின், தீவிர விசுவாசியாக இருந்த போதும் அமைச்சர் மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பை அவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.இதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அமைச்சர் மஸ்தான் பதவியும் பறிக்கப்படும் என்று அமைச்சர் மஸ்தானின் எதிர் தரப்பினர் கூறி வந்தனர். மஸ்தான் ஆதரவாளர்களும் பதவி பறிப்பு இருக்கும் என எதிர்பார்த்தனர்.ஆனால் தி.மு.க.,வில் நடந்த மேல்மட்ட அரசியல் நெருக்கடியால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கும் திட்டத்தையும், மந்திரி சபை மாற்றத்தையும் தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டு அமெரிக்கா புறப்பட்டார். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்கிற ரீதியில் அமைச்சர் பதவி தப்பியதால் அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.அத்துடன் அடி மட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து அமைச்சர் பதவிக்கு வந்த மஸ்தான் தலைமையை சமாதானம் செய்யும் திறமை படைத்தவர். எனவே சட்டசபை தேர்தல் வரை அமைச்சர் பதவி பறிப்பு இருக்காது என்கின்றனர் அவரது ஆதர வாளர்கள்.-நமது நிருபர்-