| ADDED : ஜூலை 05, 2024 05:03 AM
திருவெண்ணெய்நல்லுார்: புதுச்சேரியில் கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து கொடுத்த கொத்தனாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், சாராயத்தை குடித்த முதியவர் நேற்று அதிகாலை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்,60; கொத்தனாரான இவர், புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 29ம் தேதி அதேபகுதியை சேர்ந்த ஜெயராமன்,65; ரூ.50 பணத்தை கொடுத்து மடுகரையில் பாக்கெட் சாராயம் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.அதன்படி முருகன் அன்று மாலை வேலை முடிந்ததும், மடுகரையில் 5 பாக்கெட் சாராயம் வங்கி வந்தார். அதனை அன்று இரவு முருகன், ஜெயராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் குடித்தனர்.வீட்டிற்கு சென்ற ஜெயராமன், மறுநாள் 30ம் தேதி காலை படுக்கையில் சுய நினைவின்றி மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகன் மற்றும் சிவசந்திரனை பிடித்து விசாரித்தனர்.அப்போது, முருகன் தான் மடுகரைக்கு சென்றபோது பாக்கெட் சாராயம் வாங்கி வந்து அதனை மூவரும் குடித்ததாக கூறினார். சந்தேகத்தின் பேரில் போலீசார் முருகனை மடுகரைக்கு அழைத்துச் சென்று மடுகரையில் தான் வாங்கினாரா என கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்தனர்.பின், முருகன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து ரத்தம், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளை செய்தனர். தொடர்ந்து 2 நாள் மருத்துவமனையில் டாக்டர்கள் மேற்பார்வையில் இருந்த இருவரும் கடந்த 1ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்து கொடுத்ததாக போலீசார் வழக்கு பதிந்து முருகனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன், 65; நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இறந்தார். இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராமன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.