| ADDED : மே 08, 2024 11:55 PM
செஞ்சி : செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பாதிக்கப்பட்டதால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடியில் வீடுகளுக்கு மேலே மும்முனை மின்சார ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 3:00 மணியளவில் காமராஜ் என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் அவரது 8 வயது மகன் ஹரிஷ் என்பவர் விளையாடி கொண்டிருந்தார்.நேற்று காலை மழை பொழிந்து வீட்டு மாடி ஈரமாக இருந்ததால், மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி ஹரிஷ் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற பெற்றோர் சிறுவனை மீட்டு கீழ்பென்னாத்துார் ஆரம்ப சுகாதார நியைத்திற்கு அழைத்து சென்றனர்.மேல் சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்த கிராம மக்கள் மாலை 4:30 மணியளவில் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில், பாப்பாம்பாடி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் பொது மக்களை சமாதானம் செய்து, மாலை 4:50 மணியளவில் மறியலை கைவிட செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.