| ADDED : ஜூன் 25, 2024 07:07 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில், தம்பதி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.கோயம்புத்துார், சரவணன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் விக்னேஷ், 32; இவர் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து கோயம்புத்துாருக்கு பி.எம்.டபுள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது தாயார் பாமா, 58; மனைவி சுதா, 28; ஆகியோர் சென்றனர். காரை விக்னேஷ் ஓட்டினார்.விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் கூட்ரோடு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதி, எதிரில் திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் ஏர் பலுான் விரிவடைந்ததாலும், சீட் பெல்ட் அணிந்ததாலும் பயணம் செய்த விக்னேஷ், சுதா, பாமா ஆகிய 3 பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின், சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.