உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அறிவியலின் வளர்ச்சியை புரிந்து கற்க வேண்டும் மாணவர்களுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் அட்வைஸ்

அறிவியலின் வளர்ச்சியை புரிந்து கற்க வேண்டும் மாணவர்களுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் அட்வைஸ்

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமம் சார்பில், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் பிரிவில் 1994-97ல் பயின்ற சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, இ.எஸ்., கல்விக்குழும நிறுவன தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். நிறுவனர் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார். முதல்வர் ஆமோஸ் ராபர்ட் வரவேற்றார். கல்விக்குழும நிர்வாகிகள், கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழாவில், வீரமுத்துவேல் பேசியதாவது:அறிவியலின் வளர்ச்சி, தொழில் நுட்பத்தின் இன்றிமையாமையை மாணவர்கள் புரிந்து கற்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு ஏழ்மை தடையல்ல. தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை, ஆர்வத்தோடு செயல்பட்டால் கண்டிப்பாக வளர்ச்சி அடையலாம். எந்தவொரு பணியையும் குழுவாக சேர்ந்து துவங்கும் போது வெற்றி எளிதில் பெற இயலும். படித்த பின், எந்த பணிக்கு செல்லப் போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். படிப்பதை புரிந்து பயில வேண்டும்.இந்தியாவில் முதன்முறை பி.எஸ்.எல்.வி.,யில் 104 சாட்டிலைட் விண்வெளிக்கு அனுப்பினோம். இந்த முயற்சியில் நானும் இருந்தேன். ஆனால் சந்திராயன் -3 மூலம் தான் நான் வெளியே தெரிந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்கள் எந்த ரோல் செய்தாலும், நுாறு சதவீதம் விருப்பத்தோடு செய்யுங்கள்.இவ்வாறு வீரமுத்துவேல் பேசினார்.முன்னதாக மின்சாரத்தில் இயங்கும் கார் இயக்கம் மற்றும் அதனை பற்றிய ஆராய்ச்சி படிப்பக வளாகத்தை திறந்து வைத்து, கல்லுாரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மரக்கன்று நட்டார். தன்னுடன் பயின்ற நண்பர்களை சந்தித்தார். கல்லுாரி மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை