உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இறால் குஞ்சு பொறிப்பகங்களில் வசூல் வேட்டை; இடத்தை மாற்ற உரிமையாளர்கள் முடிவு

இறால் குஞ்சு பொறிப்பகங்களில் வசூல் வேட்டை; இடத்தை மாற்ற உரிமையாளர்கள் முடிவு

மரக்காணம் பகுதியில் கட்ட பஞ்சாயத்து ஆதிக்கத்தால் இறால் குஞ்சு பொறிப்பகங்கள் இடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலேயே அதிகளவாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரையோரம் 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பகங்கள் உள்ளன. மரக்காணத்தை சுற்றியுள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இறால் குஞ்சு பொறிப்பகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இறால் குஞ்சு ஏற்றுமதி செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை, கடலுார், வேதாரண்யம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா மாநிலம் மற்றும் அண்டை நாடான சீனாவிற்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அன்னிய செலாவணி அதிகரிக்கிறது.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இறால் குஞ்சு தேவைகள் குறைந்துள்ளதால், தொழில் நலிவடைந்துள்ளது. இறால் குஞ்சு பொறிப்பகங்கள் உள்ள பகுதியில் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், கோவில் திருவிழா மற்றும் பொது வேலைகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள இறால் குஞ்சு பொறிப்பக உரிமையாளர்கள் பண உதவிகளை செய்து வருகின்றனர்.சில மாதங்களாக இந்த பகுதியில் கட்ட பஞ்சாயத்தார்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இறால் குஞ்சு பொறிப்பக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பணம் கொடுக்க மறுக்கும் இறால் குஞ்சு பொறிப்பகம் உரிமையாளர்கள் மீது அவதுாறு தகவல்களை வெளியிடுவது. இறால் குஞ்சு பொறிப்பகத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதற்கு போலீசார் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் கட்ட பஞ்சாயத்தார்களை அனுசரித்து போகும்படி கூறி அனுப்பி விடுகின்றனர்.இதனால் கட்ட பஞ்சாயத்து ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள இறால் குஞ்சு பொறிப்பகங்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணியில் உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் 100க்கும் மேற்பட்டோார் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறால் குஞ்சு உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை