| ADDED : ஜூலை 08, 2024 04:56 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி தண்ணீருள்ள குளம் வீணாவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலம், தாட்கோ உள்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அதிகாரிகள் பலரும் கலெக்டர் அலுவலக வளாக சாலையை பயன்படுத்தி தினந்தோறும் செல்கின்றனர்.வளாகத்தில் உள்ள குளம் பல மாதங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. பின், குளத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.விழுப்புரத்தை சுற்றியுள்ள பல குளங்கள் தண்ணீரின்றி வறண்டுள்ள தற்போதைய சூழலில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளத்தில் நீர் இருந்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை களைந்து, தண்ணீரை துாய்மைபடுத்தி, அதில் வார இறுதியில் சிறுவர்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் படகு சவாரி விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குளம் வீணாகாமல் பராமரிக்கப்படுவதோடு, தண்ணீரும் வீணாகாமல் இருக்கும்.