| ADDED : ஜூலை 08, 2024 05:00 AM
விழுப்புரம்: கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சபை நிர்வாகிகள் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.டி.இ.எல்.சி., தேவாலயத்தின் விழுப்புரம் மறைமாவட்ட செயலாளர் விக்கிரவாண்டி அருகே ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்த குணசீலன் தலைமையில் திருச்சபை நிர்வாகிகள், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ள மனு:எங்கள் திருச்சபைக்கு சொந்தமான இடம் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ளது. அந்த இடத்தை தனி நபர் ஒருவர், தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி, போலி ஆவணத்தைக் காட்டி எங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கடைகளை சேதப்படுத்தியுள்ளார்.இந்த இடம் அவர்களின் இடமென கூறி, விளம்பர பலகையை வைத்துவிட்டு சென்றுள்ளார்.இது பற்றி, விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின், அந்த விளம்பர பலகை அகற்றப்பட்டது. அதன் பின், நாங்கள் நேற்று முன்தினம் எங்கள் திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் தடுப்பு அமைத்தோம்.நாங்கள் அங்கிருந்து வந்தபின், அந்த நபரின் துாண்டுதலின் பேரில், 2 பேர் எங்கள் இடத்திற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி மீண்டும் அவர்களின் இடம் எனக்கூறி விளம்பர பதாகையை வைத்துச் சென்றுள்ளனர்.போலியான ஆவணத்தைக் காட்டி, எங்கள் திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் எந்தவொரு பிரச்னையும் நிகழாத வண்ணம் உதவும்படி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.