விழுப்புரம் நகர மன்றத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்: குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என்னாச்சு?
விழுப்புரம்: விழுப்புரம் நகர மக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கவுன்சிலர்கள், நகரமன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை, நகர மன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் வீரமுத்துகுமார், நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா, துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், உதவி பொறியாளர் ராபர்ட் கிளைவ், வருவாய் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் நந்தா நெடுஞ்செழியன், வசந்தா, ஜெயந்தி, ஜெயப்பிரியா சக்திவேல், கலை, சங்கர் உட்பட 19 பேர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:கூட்டத்தில் 162 தீர்மானங்கள் கொண்டு வந்தும், 9வது வார்டுக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. பல்வேறு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியும், 3 ஆண்டுகளாக 9வது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா கூறினார்.அதே கட்சியைச் சேர்ந்த சேகர், கோதண்டராமன், செல்வம் ஆகியோர் தங்களது வார்டுகளில் குடிநீர், சாலை வசதி, தெரு மின் விளக்கு வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்றனர்.தனது வார்டில் தெரு மின் விளக்குகள் பழுது பற்றி புகார் தெரிவித்தும் சரி செய்யவில்லை. சொந்த செலவில் புதிய மின் விளக்குகள் பொருத்தி வருகிறேன் என பா.ஜ., வடிவேல் பழனி கூறினார்.கடந்த 2 ஆண்டுகளாக கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகள் செய்து முடிக்கவில்லை. இது பற்றி நகர் மன்ற தலைவர், கமிஷனர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறாததால், சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் என தி.மு.க., மணவாளன் கூறினார்.நகரில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் தடைபட்டுள்ளது. இதனால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, மேடு பள்ளமாக உள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னை தொடர்கதையாக நீடிக்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களை அவஸ்தையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியாஸ் அகமது கூறினார்.எனது வார்டு பிரச்னைகள் குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வார்டு பிரச்னை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என அ.தி.மு.க., பத்மாவதி கூறினார். இதனால், நகரமன்ற தலைவர் - கவுன்சிலர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வார்டு பிரச்னைகளை தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கப்பதாக நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.