விக்கிரவாண்டி, : ''விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு நாளிலும் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர்'' என பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, காலை 7:30 மணிக்கு தனது சொந்த ஊரான விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஓட்டுச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர்., நகரில் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு தலா ரூ. 6000 வழங்கியுள்ளனர். இதே போல தொகுதி முழுவதும் ரொக்கப்பணம், பரிசு பொருட்கள் கொடுத்துள்ளனர். வி.சாத்தனுாரில் பரிசு பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலைகளையும் பா.ஜ., பா.ம.க.,வினர் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.மக்கள் தெளிவாக பா.ம.க.,விற்கு ஓட்டளித்துள்ளனர். பா.ம.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்த இடங்களில் தி.மு.க.,வினர் நேரில் சென்று, கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டி வருகின்றனர். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. பா.ம.க., அமோக வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க., வேட்பாளர் சிவா, விழுப்புரம் அருகே உள்ள தனது சொந்த ஊரான, அன்னியூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 7:00 மணிக்கு குடும்பத்துடன் சென்று ஒட்டளித்தார்.பின்னர் அவர் கூறுகையில், 'தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். எனவே, இந்த தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றியை பெறும்' என்றார். மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார், தனது சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த தி.மேட்டுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், தனது குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி தனலட்சுமி,90. வயது முதிர்வு காரணமாக இவரால் நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். நேற்று மாலை 5:30 மணி அளவில் அவரது உறவினர்கள் கட்டிலில் அவரை படுக்க வைத்து ஓட்டுச்சாவடிக்கு துாக்கி வந்து, அவரை ஓட்டு போட செய்தனர்.