வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெரிய திட்டம்.. காலதாமதமாகுவதை தவிர்க்க முடியாது...
கண்டமங்கலம், : கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடித்து, ஒரு மாதத்தில் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 182 கி.மீ., துார நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நான்கு கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் - புதுச்சேரி இடையே (விழுப்புரம்-எம்.என் குப்பம் வரை) 29 கி.மீ., துார சாலையில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி மட்டுமே எஞ்சியுள்ளது.ஜானகிபுரம் - வளவனுார் இடையே புதிய புறவழிச்சாலைப் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில், அரியூர், எம்.என்.குப்பம் ஆகிய இடங்களில் மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது.இதில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது. ரயில்வே மேம்பால பணிக்காக கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதல் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. ஒரு கி.மீ., சாலையை கடந்து செல்ல தினமும் பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இப்படி 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகாய் அதிகாரிகள், வரும் செப்., 15ம் தேதிக்குள், ரயில்வே மேம்பாலத்தின் தென்பகுதி பணியை முடித்து, வாகன போக்குரவத்திற்கு திறந்து விடப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தபடி 30 நாட்கள் கடந்த நிலையில் பணிகள் நிறைவடையவில்லை.கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் 650 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் அகலத்திலும் பிரமாண்ட இரும்பு பாலமாக (பவுஸ்டிங் கர்டர்) அமைக்கப்பட்டு வருகிறது. இரும்பு பாலத்தை இணைக்க கிழக்கே 30 மீட்டர் நீளம், மேற்கே 15 மீட்டர் நீளம் என பிரம்மாண்ட கான்கிரீட் துாண்கள் அமைத்து சாலையை இணைக்கும் பணி கடந்த 30 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.மேம்பாலத்திற்கு கிழக்கே 30 மீட்டர் நீளம், 6 அடி உயரம் கொண்ட 4 ராட்சத கான்கிரீட் துாண்கள் பிரம்மாண்ட கிரேன்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கே 15 மீட்டர் நீளமுடைய காண்கிரீட் துாண்கள் நிலை நிறுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், அதிகாரிகள் உறுதி அளித்தபடி வரும் 15ம் தேதிக்குள், தெற்கு சாலை போக்குவரத்துக்கு திறந்துவிட வாய்ப்பு இல்லை. ஆனால், பல மாதங்களாக அவதியுற்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், நகாய் அதிகாரிகள் உறுதியளித்தபடி, ரயில்வே மேம்பாலத்தை வரும் 15ம் தேதிக்குள் போக்குவரத்திற்கு திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய (நகாய்)அதிகாரிகள் கூறுகையில், 'கண்டமங்கலத்தில் சாலையின் தெற்கே உள்ள ரயில்வே மேம்பாலத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் திறந்து விட முழு முயற்சியாக பணிகளை மேற்கொண்டோம். ஆனலும், பணி நிறைவடையாததால், வரும் 15ம் தேதிக்குள் பாலத்தை திறந்து விடுவதில் சிரமம் உள்ளது.இருப்பினும், இம்மாத இறுதிக்குள், தென்புறம் உள்ள ரயில்வே மேம்பாலத்தை உறுதியாக போக்குவரத்திற்கு திறந்து விடப்படும். அதற்காக முழு மூச்சாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.
பெரிய திட்டம்.. காலதாமதமாகுவதை தவிர்க்க முடியாது...