| ADDED : மே 03, 2024 10:05 PM
திண்டிவனம்,- திண்டிவனம் நத்தமேடு நரிக்குறவர் காலனி பகுதியின் பொது வழி பிரச்னை குறித்து, எம்.எல்.ஏ., நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.திண்டிவனம் அடுத்த நத்தமேடு பகுதியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த தனியாருக்கு சொந்தமான பொது வழி சில நாட்களுக்கு முன் அடைக்கப்பட்டது. இதற்கு நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் நேரில் சென்று ஆய்வு நடத்தி, நரிக்குறவர் காலனி மக்கள் செல்வதற்கு தனியாருக்கு சொந்தமான இரண்டு மாற்று வழிகளை உபயோகப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில் திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேற்று காலை, நத்தமேடு பகுதி நரிக்குறவர் காலனிக்கு நேரில் சென்று, அந்தப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்த பிரச்னை குறித்து, வழியை அடைத்த தனியார் உரிமையாளரிடம் எம்.எல்.ஏ., மொபைல் போனில் பேசி, நரிக்குறவர் காலனி மக்கள் மீண்டும் அந்த வழியை பயன்படுத்திக் கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.மேலும், நத்தமேடு நரிக்குறவர் காலனி மக்களுக்கு அதே பகுதியில் பட்டா வழங்குவதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக, அங்குள்ள நரிக்குறவ மக்களிடம் தெரிவித்தார்.அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர் ஜனார்த்தனன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், எம்.ஜி.ஆர்.மன்றம் பன்னீர்செல்வம், நகர பாசறை செயலாளர் கார்த்திக், பிரதிநிதி ராஜா, மாணவரணி குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.