விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் 5005 பேர், நாளை நடைபெறும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.தமிழகத்தில் நாளை 5ம் தேதி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் பள்ளி மையத்தில் 469 பேரும், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 960, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மையத்தில் 696, அக்ஷர்தம் பள்ளியில் 600, ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் 600, இ.எஸ்.கலை அறிவியல் கல்லுாரியில் 504, சேக்ரட் ஹார்ட் கலை அறிவியல் கல்லுாரியில் 480, சூர்யா கல்லுாரியில் 504, ஜான்டூயி இன்டர்நேஷ்னல் பள்ளியில் 192 பேர் என 9 மையங்களில், மொத்தம் 5005 பேர் தேர்வு எழுத உள்ளனர்.விழுப்புரம் மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்பாளரான சேக்ரட் சென்ட்ரல் பள்ளி முதல்வர் சுசீலா தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மதியம் 2:00 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடக்கிறது.இத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 11:30 மணியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். பகல் 1:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதன் பிறகு வரும் தேர்வர்கள் விதிகள்படி அனுமதிக்கப்படமாட்டார்கள். வழக்கமான சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.தேர்வுக்கு வரும் மாணவர்கள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை, ஹால்டிக்கெட், 2 புகைப்படம் மட்டுமே கொண்டு வந்தால் போதும். பேனா, பென்சில், மொபைல் போன் போன்ற எதுவும் அனுமதிக்கப்படாது. 9 தேர்வு மையங்களில் தலா ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், அறை கண்காணிப்பாளர்கள் 2 ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள்.தேர்வு அப்சர்வர்கள் 20 பேரும், தலா ஒரு பாதுகாப்பு அலுவலரும், 150 ஆசிரியர்கள் என மொத்தம் 420 பேர் இந்த தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.