| ADDED : ஜூலை 28, 2024 04:42 AM
விழுப்புரம், : தமிழகம் என்ற பெயரை கூற மனமில்லாத பா.ஜ., விற்கு வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.விழுப்புரத்தில் நடந்த தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது,இந்த கூட்டம் எதிர்காலத்தை எப்படி எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும். தற்போது நடைபெறும் மத்திய அரசு, தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியும். தமிழகம் என பெயர் கூறக்கூட அவர்களுக்கு மனமில்லை. அங்கு, நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் தான் படித்தவர். பா.ஜ., அரசு தமிழகத்தை எந்தளவு புறக்கணிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பா.ஜ., அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் 2 தொகுதிகள் கூட நீங்கள் ஜெயிக்க முடியது என மக்கள் நிருபித்துள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி நீங்கள் தற்போதிருந்தே தயாராக இருக்க வேண்டும்.இந்தியாவிற்கே திராவிட மாடல் ஆட்சியை கொண்டு செல்லும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். இவரை பின்பற்றி 9 மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.மகளிருக்கு முதல்வர் முக்கியத்துவம் வழங்குவதை இங்குள்ள மகளிர்கள் தான் பெண்களிடம் கூற வேண்டும். முதல்வர் 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை நீங்கள் வீதி, வீதியாக சென்று கூற வேண்டும். நீங்கள் தற்போதிலிருந்து இந்தியா கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.