வடகிழக்கு பருவமழை பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை: மீட்பு பணிகளுக்கு தயாராக கலெக்டர் உத்தரவு
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், வரும் பருவமழை, புயலின் போது அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மின் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசியதாவது:மின் வாரியத்தினர் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை பாதிக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி, கனமழை மற்றும் புயலுக்கு முன்பாகவே சீரமைக்க வேண்டும். போதிய மின் கம்பங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் முக்கிய வாய்க்கால்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும். போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்குபைகள் ஆகியவற்றை இருப்பு வைத்திருக்க வேண்டும்.மீன்வளத்துறையினர், புயல் ஏற்படுவதற்கு முன்பு மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நெடுஞ்சாலைத்துறையினர், கனமழைக்கு முன்னரே நெடுஞ்சாலைகளில் உள்ள சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளையும், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தாழ்வான மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை, மருந்துகள் இருப்பு வைத்திடவும், பேரிடரின் போது தொற்றுநோய் ஏற்படாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்கிட மொபைல் பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைக்கவும், முன்னேற்பாடாக, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தினசரி தண்ணீரை இருப்பு வைக்க வேண்டும்.குறிப்பாக மரக்காணம் மற்றும் வானுார் தாலுகாவில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். கனமழை மற்றும் புயலின்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய்நாராயணன், சப் கலெக்டர் முகுந்தன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.