| ADDED : ஆக 07, 2024 08:22 PM
விழுப்புரம்:அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கு விசாரணையில் நேற்று ஆஜரான ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் இருவரும் பிறழ் சாட்சியம் அளித்தனர்.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ல் வழக்கு தொடர்ந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில், முன்னாள் கலெக்டர் பழனிசாமி, முன்னார் ஆர்.டி.ஓ., பிரியா உள்ளிட்ட 47 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விசாரணையில். ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் உளுந்துார்பேட்டை மனோகரன், திண்டிவனம் முல்லைவேந்தன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அப்போது அவர்கள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த தாங்கள் செல்லவில்லை. அதிகாரிகளின் வற்புறுத்தலின்பேரில், அது குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக பிறழ் சாட்சியம் அளித்தனர்.அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.