| ADDED : ஏப் 30, 2024 11:20 PM
செஞ்சி : செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பஸ் வசதி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், விபத்தில் சிக்கினாலும், பாம்பு கடித்தாலும் அரசு மருத்துமனைகளையே நாடுகின்றனர்.செஞ்சியில் உள்ள அரசு மருத்துமனை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருததுமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் செஞ்சி நகரத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களான பெருங்காப்பூர், ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், செம்மேடு, தென்பாலை, தேவதானம்பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், மாதப்பூண்டி, பாலப்பாடி, பாக்கம், சோ.குப்பம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மருத்துமனைக்கே சிகிச்சைக்கு செல்கின்றனர்.இதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்பென்னாத்துார், சோமாசிபாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கே செல்கின்றனர்.மேல் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஒரே நாளில் சிகிச்சை முடிவதில்லை. பலரும், பல நாள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். சிலருக்கு தொடர்ந்து பல நாட்கள் தினமும் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது போன்றவர்கள் செஞ்சியில் இருந்தும், வழியில் உள்ள ஊர்களில் இருந்தும் பல்வேறு பஸ்களில் திருவண்ணாமலை செல்கின்றனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு அரசு டவுன் பஸ்சிலும், ஷேர் ஆட்டாக்களிலும் செல்கின்றனர்.பல நேரம் மருத்துவமனைக்கு டவுன் பஸ் கிடைப்பதில்லை. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். வயதானவர்களும், நோயாளிகளும் பஸ்சில் இருந்து இறங்கி வேறு பஸ்சில் செல்வதற்கும், ஆட்டோவில் செல்வதற்கும் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். நோயாளிகளுடன் தங்கும் உதவியாளர்கள், உறவினர்கள் தினமும் சொந்த ஊருக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தினமும் காலையில் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நேரடி பஸ் வசதி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.