| ADDED : ஜூன் 10, 2024 01:23 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து விதிமீறல்களை குழு அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட குறு, சிறு தொழில் சங்கத்தினர் வலியுறுத்தினர்.விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் சங்க தலைவர் அம்மன் கருணாநிதி தலைமையில் கலெக்டர் பழனியிடம் அளித்த மனு:விழுப்புரத்தில், போக்குவரத்து விதிமீறல் மற்றும் பஸ் நிறுத்தங்களில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், நகரில் அதிவேகத்தில் பஸ்கள் இயக்கி விபத்துகள் ஏற்படுத்துவது தொடர்கிறது.தமிழக முதல்வர் அறிவுறுத்தியபடி, கலெக்டர் தலைமையில், எஸ்.பி., ஆர்.டி.ஓ., அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கொண்ட ஒரு குழு உருவாக்கி, விதிகளை மீறும் பஸ்கள், ஆட்டோகள், ஷேர் ஆட்டோகள், லோடு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் விதிகளை பின்பற்றி ஓட்டப்படுகிறதா.அந்தந்த வாகனங்களில் செல்லும் மக்கள், மாணவர்களையும் சரியாக ஏற்றி, இறக்கி விடுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். குழு மூலம் கண்காணித்து விதி மீறுபவர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டால், பொது மக்கள் பாதுகாப்பாக சென்று வர முடியும்.சிக்னலில் ஆட்டோகள், ஷேர் ஆட்டோக்கள், பஸ்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தாமல், சாலை வளைவில் நிறுத்தி பயணிகள் ஏற்றுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால், குழு அமைத்து விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.