செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்:விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறையில் அரசு செம்மண் குவாரியில், விதிமுறை மீறி செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட எட்டு பேர் மீது 2012ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களில், இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ளளனர். அதில், 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக, பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம், கோதகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.வழக்கு விசாரணைக்கு, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.