திண்டிவனம் : திண்டிவனம் போக்குவரத்தை சீரமைக்க போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.திண்டிவனம் நகர பகுதிக்கு சுற்றுப் பகுதி கிராமங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நகரில் நேரு வீதி, செஞ்சி ரோடு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. நேரு வீதியில், தாலுகா அலுவலகம், காய்கறி மார்க்கெட், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அமைந்துள்ளன.திண்டிவனம் பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், நேரு வீதி, செஞ்சி ரோடு வழியாக செல்கிறது.இதில் நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, புதுமசூதி தெரு ஆகிய பகுதிகள் ஒரு வழிப் பாதையாக மாற்றம், செய்யப்பட்டும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி, எதிரும், புதிருமாக செல்கின்றனர்.போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த திண்டிவனத்தில் போக்குவரத்து போலீசார் போதுமான அளவில் இல்லை. போக்குவரத்து பிரிவில் 20 போலீசார் பணியில் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் எப்படி திண்டிவனம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.இருக்கும் சொற்ப அளவிலான போலீசாரும் நகரத்தையொட்டியுள்ள முக்கியமான சாலைகளில் போக்குவரத்து பணிகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.ஆனால் திண்டிவனம் நகரத்திற்குள் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை என பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.திண்டிவனம் நகர பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பிள்ளை சந்திப்பு, நேரு வீதி, காந்தி சிலை பகுதி, செஞ்சி பஸ் ஸடாப்பிங் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிப்பதற்கு, எஸ்.பி., தீபக் சிவாச் நடவடிக்கை எடுக்க வேண்டும்.