| ADDED : ஆக 08, 2024 11:16 PM
செஞ்சி: வல்லம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:வல்லம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான மின்கல தெளிப்பான். விசைத் தெளிப்பான், போன்றவையும் தரிசு நிலமாக இருந்தால் அதில் உள்ள முட்புதர்களை அகற்றவும் மானியம் வழங்கப்படுகிறது.மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தார்பாய், விவசாய உபகரண தொகுப்பு, துத்தநாக சல்பேட், ஜீப்சம் போன்ற இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 22 இனங்களில் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கோடை உழவு மேற்கொள்ள மானியமும், சிறுதானிய பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்ய 50 சதவீத மானிய விலையில் விதைகளும், பசுந்தாள் உர விதை, திரவ உயிர் உரம் வழங்கப்படுகிறது. மரபுசார் நெல் ரகமான சீவன் சம்பாவை சாகுபடி செய்யவும், நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையிலும் சீரகசம்பா, கருங்குறுவை நெல் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் காட்டுப்பன்றி விரட்டி, காய்கறி குழித்தட்டுகள் முழு மானியத்திலும், நேரடி நெல் விதைப்பு இயந்திரம் 80 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. வல்லம் வட்டார விவசாயிகளுக்கு இத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். உழவன் செயலி மூலம் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள். இடுபொருட்கள் இருப்பு விபரம், இடுபொருட்கள் முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர்களின் பயண விபரம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.