| ADDED : ஆக 17, 2024 03:35 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் மாதவன்,56; விவசாயி. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாதவன் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, அவரது நிலத்திற்கு அருகே சிறுவாடி கிராம திடீர் நகரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் நல்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சிறுவாடி கிராமத்தை சேர்ந்த கிருபாகரன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், சவுக்கு கன்றுகளை பயிரிட்டு அதில், காட்டுப்பன்றி வராமல் இருப்பதற்காக, அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தனர். மின் வேலி அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் சென்ற மாதவன் ,மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார், மாதவன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.