உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு

விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில், யு.பி.எஸ்., மின் சாதனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் 'டிவி'க்களில் தெரியாததால் 20 நிமிடம் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் (தனி) தொகுதிக்கு நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 6 சட்டசபை தொகுதிக்கான இயந்திரங்கள், தனித்தனி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகின்றனர்.ஒவ்வொரு அறை முன்பும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த 6 தொகுதி பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பும், ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு அறையில், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் சுழற்சி முறையில் பார்வையிட்டு வருகின்றனர்.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, தினமும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு, திடீரென கண்காணிப்பு அறையில் இருந்த 'டிவி'க்களில் கேமரா காட்சிகள் தெரியாததால் பரபரப்புநிலவியது.இதுகுறித்து, முகவர்கள் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.அதில், கோடை வெயில் காரணமாக, அங்கு குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறைக்காக பயன்படுத்திய யு.பி.எஸ்., மின்சாதனம் பழுதாகி, பியூஸ் போயுள்ளது.இதன் காரணமாக 20 நிமிடம் கண்காணிப்பு காட்சிக்கான 'டிவி' நின்றுள்ளது. உடனே அங்குள்ள மின் ஊழியர்கள் அதனை சரி செய்து, சீரமைத்ததால், மீண்டும் காலை 9:55 மணிக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் செயல்பாட்டுக்கு வந்தன.இதனையடுத்து, கலெக்டர் பழனி, அங்கிருந்த முகவர்களை, 6 தொகுதி ஸ்டிராங் ரூம்களுக்கும் அழைத்துச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திவிட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் மையத்தில் காலை 2 மணிநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

தேர்தல் அலுவலர் விளக்கம்

நேற்று காலை 9:30 மணியளவில், அங்குள்ள யு.பி.எஸ்., மின் சாதனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின் சாதனங்களில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது. இந்த பழுது ஏற்பட்ட உடன், தேர்தல் நடத்தும் அலுவலரான நானும், எஸ்.பி., மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தோம். மெக்கானிக்கல் பழுதால், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மற்றும் கண்காணிப்பு அறை காட்சியில் சிறிது நேரம் தடை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வேட்பாளர்களின் முகவர்களும் இருந்துள்ளனர்.அ.தி.மு.க., முகவர் தழிழரசன், வி.சி., முகவர் ஐயப்பன் உள்ளிட்டோர் முன்னிலையில், தொழில்நுட்ப அலுவலர்கள் மூலம் உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு முகவர்களை அழைத்துச் சென்று, 6 ஸ்டாராங் ரூம் அறைகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடப்பட்டது. இனி மின்சார பழுது ஏற்படாத வகையில் முன்னேற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

UTHAMAN
மே 04, 2024 12:46

இதே நிகழ்வுகள் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் அதிமுகவும் பாஜகவும் வாக்கு பதிவு இயந்திரங்களை மாற்றிவிட்டனர் என ஒருமாதத்திற்கு ஆர்பாட்டங்களையும் வழக்குகளையும் ஊடகங்களில் விவாதங்களையும் நடத்தி அலப்பறைகளை செய்வர் இப்போது ஒருத்தனும் வாயே திறக்கமாட்டார் எவராவது பேசுனா இருக்கவே இருக்கு அவதூறு வழக்கு இதுலயும் கட்சிக்காரன் காண்ட்ராக்ட் இருக்குமோ


மேலும் செய்திகள்



புதிய வீடியோ