| ADDED : மார் 22, 2024 10:44 PM
வானுார் : வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அ.தி.மு.க.,வினர் 'சென்டிமென்ட்டாக' வாஸ்துபடி தேர்தல் அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலையொட்டி வானுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வினர் கடந்த ஒரு வாரமாக தேர்தல் அலுவலகத்திற்கான இடத்தை தேடி அலைந்தனர். கடந்த முறை சட்டசபை தேர்தலின் போது, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி அருகே ஒரு வளாகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்தனர்.அந்த தேர்தலில் சக்கரபாணி எதிர்பார்த்ததை விட, கூடுதல் ஓட்டுகளைப் பெற்று, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். கிழக்கு திசையை பார்த்தபடி அலுவலகம் திறந்ததால், அதிஷ்டம் அடித்ததாக கருதி, அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் அலுவலகம் திறக்க முடிவெடுத்துள்ளனர்.இதற்காக கடந்த முறை திறக்கப்பட்ட அதே வளாகத்தில் வாஸ்துபடி கிழக்கு நோக்கிய அலுவலகத்தை திறக்க முடிவு செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி பளபளப்பாக மாற்றி வருகின்றனர்.கடந்த முறை பா.ம.க., கூட்டணியில் இருந்ததால், அ.தி.மு.க., வாஸ்து முறை பலித்தது. இந்த முறை பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதனால் அ.தி.மு.க.,வின் 'சென்ட்டிமென்ட்' பலிக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.