விழுப்புரம், : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த 276 ஓட்டுச்சாவடிகளிலும் வெப் கேமரா வைத்தும், பதற்றமான 110 இடங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள் 23 மண்டலங்களில், 276 ஓட்டுச்சாவடிகளில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6.00 மணி வரை நடந்தது. இதற்காக, 552 பேலட் யூனிட்கள், 276 கன்ட்ரோல் யூனிட்கள், 276 வி.வி.பாட் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1,355 பேர் பணியில் ஈடுபட்டனர். 3 எஸ்.பி.,க்கள் தலைமையில், 2,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 276 ஓட்டுச்சாவடி மையங்களிலும், இந்த முறை வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. மேலும், 44 வாக்குச்சாடிகள் பதற்றமானவையாக கருதி, அங்கு 44 நுண் பார்வையாளர்களும், பாதுகாப்பு பணிக்காக, தலா 2 பேர் வீதம், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் ஈடுபட்டனர்.மேலும், மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 110 இடங்களில் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டது.இந்த வெப் கேமராக்கள், சி.சி.டி.வி., கேமரா பதிவுகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனி, விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலிருந்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.