மேலும் செய்திகள்
உண்டியலை உடைத்து திருட்டு
24-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூன்று கோவில்களில் உண்டியல் உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த மேல்பாதியில் உள்ள ஐயனாரப்பன் கோவிலில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து, பூசாரி ஏழுமலை கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று காலை கோவிலுக்கு வந்து ஏழுமலை பார்த்தபோது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.கோவில் உள்ளே இருந்த ஒலிபெருக்கி செட்டையும் மர்ம நபர்கள் திருடிசென்றதும் தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.இதேபோல், அருகே உள்ள குரும்பன்கோட்டை அய்யனாரப்பன் கோவிலிலும் நேற்று முன்தினம் இரவு, கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் மற்றும் பூஜைக்காக வசூலித்து வைத்திருந்த ரூ.18,000 பணம் மற்றும் இரண்டு தங்க காசுகளையும் திருடிசென்றுள்ளனர். இதுகுறித்து, கோவில் பூசாரி வீரமணி அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.வளவனூர் அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து திருடியதோடு, அம்மன் கழுத்திலிருந்த 2 கிராம் தாலி செயினையும் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து, வளவனூர் போலீசார் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.வளவனூர் அருகே உள்ள இந்த மூன்று கோவில்களிலும், ஒரே கும்பல் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். இது குறித்த புகார்களின் பேரில், வளவனூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Aug-2024