| ADDED : ஆக 11, 2024 06:53 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வி.கே.டி., சாலையில் ஏற்பட்டுள்ள 'மெகா' பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.அதில், விக்கிரவாண்டியில் இருந்து கோலியனுார் கூட்ரோடு வரை ஓரளவிற்கு சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கோலியனுார் கூட்ரோட்டில் இருந்து மாவட்ட எல்லையான சின்னக்கள்ளிப்பட்டு ஆற்று பாலம் வரை சாலை சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக கோலியனுார் ரயில்வே கேட், ராமையன்பாளையம், ஆழங்கால் சந்திப்பு மற்றும் சுந்தரிபாளையம் பகுதிகளில் படுமோசமாக உள்ளது.வாணியம்பாளையத்தில், பக்கவாட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அங்கு இரு மார்க்க வாகனங்களும், தற்காலிகமாக போடப்பட்ட சர்வீஸ் சாலையில் செல்கின்றன. அந்த சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.அதே போல் வி.அகரம், பஞ்சமாதேவி பகுதிகளிலும் ஜல்லிகள் சிதறி சாலை சேதமடைந்துள்ளது. அவ்வப்போது மழை பெய்யும் போது, இந்த சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சாலையில் உள்ள மெகா பள்ளங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.இதனால், வி.கே.டி., சாலை வழியாக வர வேண்டிய வாகனங்கள் விழுப்புரம், அரசூர், மடப்பட்டு, பண்ருட்டி வழியாக சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. ஓரிரு மாதங்களில் பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன்பாக வி.கே.டி., சாலையில் உள்ள மெகா பள்ளங்களை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.