உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை ஏன்? தந்தை திட்டியது காரணம் என தகவல்

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை ஏன்? தந்தை திட்டியது காரணம் என தகவல்

திண்டிவனம்; திண்டிவனம் அருகே, 'நீட்' தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தாதாபுரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகள் இந்துமதி, 19; இவர், 2022ல் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். பின், புதுச்சேரியில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், 350 மதிப்பெண் பெற்றும், மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை.இதையடுத்து, இரண்டாவது முறையாக இந்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுத புதுச்சேரியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து வீட்டிலிருந்தே படித்தார். தேர்வு எழுதுவதற்கான ஓ.பி.சி., சான்றிதழை அவரது தந்தை மற்றும் சகோதரர் நேற்று முன்தினம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.பின், தேர்வு எழுதுவதற்கான ஓப்புகை சீட்டு எண்ணை அவரது தந்தை வாங்கிக் கொண்டு, இ - சேவை மையத்திற்கு சென்று சரிபார்த்தார். அப்போது, இந்துமதி கொடுத்த ஒப்புகை சீட்டு எண் தவறாக இருந்தது. பின், இந்துமதி வேறு ஒரு எண் கொடுத்தபோது, அந்த எண் சரியாக இருந்தது.இந்நிலையில், மாலை வீட்டிற்கு வந்த ராமதாஸ், இந்துமதியிடம், 'ஏன் சரியான எண்ணை கொடுக்கவில்லை. உன்னால் அலைந்தது தான் மிச்சம்' என, கடிந்து கொண்டுள்ளார்.இதனால் மனமுடைந்த இந்துமதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார், இந்துமதி உடலை மீட்டனர். இதற்கிடையே, நீட் தேர்வு பயம் காரணமாக இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை