| ADDED : ஆக 19, 2024 12:12 AM
செஞ்சி: கிராமப்புறங்கள் நிறைந்த செஞ்சியில் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் ஊக்கப்படுத்த விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக செஞ்சி தாலுகா உள்ளது. ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் பெரும் பகுதியினர் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் அதற்கு தகுந்த பயிற்சியும், வசதிகளும் இல்லை. இதனால் மாணவர்களிடம் தனித்திறன் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன.குழு விளையாட்டிற்கும் போதிய இட வசதியும், உபகரணங்களும் இல்லை. இதனால் மாணவர்களை விளையாட்டில் சிறந்த மாணவர்களாக உருவாக்க பள்ளிகளில் வாய்ப்பு குறைவாக உள்ளது.பள்ளி கல்வித்துறை அல்லாமல் வேறு துறைகள் மூலம் அரசு ஒதுக்கும் நிதியில் பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவது, குடிநீர் வழங்குவது, கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கே போதுமானதாக இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்கப்படுத்தவும், திறமை உள்ளவர்களை கண்டறியவும், மாநில அளவிளான விளையாட்டு போட்டிகளில் செஞ்சி பகுதி பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ளவும், அதற்கான வழிகாட்டுதலுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை.இதனால் அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கும் இடங்களை பெறுவதில் செஞ்சி பகுதி மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தி மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க போதிய பயிற்சி அளிக்க செஞ்சியில் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.