மேலும் செய்திகள்
மதுரை-தூத்துக்குடி 4 வழி சாலையில் விபத்துக்கள்
26-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்த, 20 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள இடைவெளிகளில், 4 அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டதால் விபத்துகள் குறைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணத்திற்கு 32 கி.மீ., துாரம் சாலை உள்ளது. இருவழிச்சாலையாக இருந்த இச்சாலையில் பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021 - 22 ம் நிதி ஆண்டில் 217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய நான்கு வழிச்சாலை பணியில், தலா ஒரு புறத்திற்கு, 7.5 மீட்டர் அகலம் சாலை அமைக்கப்பட்டு, பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த சாலையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் சென்டர் மீடியனில் சாலையை கடக்க இடைவெளி விடப்பட்டது. இடைவெளி உள்ள பகுதிகளில் பிளிங்கர், ரிப்ளெக்டர் உள்ளிட்ட விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. நான்கு வழிச்சாலையால், போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இச்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், சென்டர் மீடியன் இடைவெளி பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களில் 49 விபத்துகள் நடந்தது. இதில், உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இருந்தபோதும் பலர் காயமடைந்தனர். இதனால், இச்சாலையைக் கடக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி., சரவணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, போக்குவரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சாலையில் விபத்து தடுப்பது தொடர்பாக கூட்டாய்வு செய்தனர். அப்போது, சென்டர் மீடியன் இடைவெளியால் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளாக 20 இடங்கள் கண்டறியப்பட்டன. மீடியன் இடைவெளியில் தடுப்புகள் அமைத்து மூடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதனையடுத்து, விபத்து பகுதிகளான திண்டிவனம் இந்திரா நகர், மன்னார் சுவாமி கோவில், ஹவுசிங் போர்டு, மானுார், எண்டியூர், பெருமுக்கல், ராவணாபுரம், நல்லாளம், கட்டளை, வெள்ளக்குளம், பிரம்மதேசம், ஏந்துார், சிறுவாடி, ஆலங்குப்பம் உள்ளிட்ட 20 இடங்களில் சென்டர் மீடியன் இடைவெளியில் 4 அடி உயரத்திற்கு கான்கிரீட் மைய தடுப்புகள் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்து மூடினர். மூடப்பட்ட இடைவெளிகளுக்கு சற்று துாரங்களில் உள்ள 'யூ டர்ன்' பகுதிகளுக்கு சென்று வாகனங்கள் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது, இச்சாலையில் விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளன. இந்த தடுப்புகள் அமைத்த பின், இந்த சாலையில் கடந்த மாதத்தில் ஒரு விபத்து மட்டுமே நடந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் முயற்சியால், திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலையில் விபத்துகள் குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
26-Oct-2025