சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர் கார் மோதி பலி
செஞ்சி: தீயணைப்புத் துறையில் பணிக்கு தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்த வாலிபர் கார் மோதி இறந்தார்.மேல்மலையனுார் அடுத்த ஆத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் அசோக்குமார், 27; பி.இ., பட்டதாரி. இவர், தீயணைப்புத்துறை பணிக்கு தேர்வாகி இருந்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.இதற்காக, ஆத்திப்பட்டில் இருந்து செஞ்சி செல்ல நேற்று காலை 7:00 மணியளவில் கடலாடிகுளம் கூட்ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்குச் சென்ற கார் மோதி விட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்த கொழப்பலுார் கிராமத்தைச் சேர்ந்த வினாயகசுந்தரம், 65; என்பவர் மீதும் மோதியது.இதில், அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வினாயகசுந்தரம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.