உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே 2 இடங்களில்விபத்து: 4 பேர் பரிதாப பலி

விழுப்புரம் அருகே 2 இடங்களில்விபத்து: 4 பேர் பரிதாப பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இரண்டு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பேர் இறந்தனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் காலனி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் தீனா, 21; அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பந்தல்ராஜ், 23; கூலி தொழிலாளிகள்.நண்பர்களான இருவரும், பல்சர் பைக்கில் நேற்று காலை புதுச்சேரி பகுதிக்கு சென்று, மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் புதிய பைபாஸ் சாலையில் மாலை 3.30 மணிக்கு வந்தபோது, ஜானகிபுரம் மேம்பாலம் அருகே கொளத்துார் சாலை சந்திப்பில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், படுகாயமடைந்த தீனா, பந்தல்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று, இருவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சாலை வளைவில், அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மயிலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக இறந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சரண்ராஜ், 24; கிரேன் ஆபரேட்டர். நாகராஜ் மகன் ஜீவா, 24; கல்லுாரி இறுதி ஆண்டு படித்து வந்தார்.இருவரும் நேற்று இரவு 7:00 மணி அளவில் பைக்கில் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சென்ட்ரல் மீடியன் பகுதியில் காத்திருந்தனர்.அப்போது சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், ஜீவாவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு 8:00 மணியவில் அனைவரையும் கலைந்து போக செய்தார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி