உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
மரக்காணம்,: மரக்காணம் பகுதியில் விவசாயிகள் உயிர் உரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மரக்கணம் வட்டாரத்தில் சம்பா நெல் நடவு பணிகள், உளுந்து, பனிப்பயிறு, மணிலா உள்ளிட்ட இறவை பயிர்களுக்கான நிலம் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் உரச் செலவை குறைத்திடவும், மண்ணில் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்து, அங்கக சத்துக்களை அதிகரித்திடவும், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் இயக்கம், பயறு வகை பெருக்கத்திடம், எண்ணெய் வித்துக்கள் அபிவிருத்தி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியம், துத்தநாக கரையும் பாக்டீரியம் முதலான உயிர் உரங்களை விவசாய பயிர்களுக்கு தேவைக்கு ஏற்ப பயன்படுத்திட 50 சதவீத மான்யத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல், சிறுதானியம் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி பயிர்கள், தென்னை, சவுக்கு உள்ளிட்ட மர பயிர்களுக்கும் தேவைக்கு ஏற்ப தொழு உரத்துடன் கலந்து பயன்படுத்தி மண் வளம் காத்து பயனடையுமாறு, தெரிவித்துள்ளார்.