உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சுவர் விளம்பரத்தில் முந்தும் அ.தி.மு.க., ஆளுங்கட்சியினர் மத்தியில் கலக்கம்

 சுவர் விளம்பரத்தில் முந்தும் அ.தி.மு.க., ஆளுங்கட்சியினர் மத்தியில் கலக்கம்

மயிலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை சுவரில் எழுதும் பணியை கட்சியினர் துவங்கி விட்டதால் ஆளுங்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைந்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. கடந்த 2021 தேர்தலில், விழுப்புரம் தொகுதியில், சண்முகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அ.தி.மு.க., விலிருந்து தடலாடியாக விலகி தி.மு.க.,வில் இணைந்த லட்சுமணன், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சண்முகத்துடன் நேருக்கு நேர் மோதி, 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் விழுப்புரத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிக்கல் என்பதால், வரும் தேர்தலில் தனது சொந்த தொகுதியான மயிலத்தில் களம் காணுவது என தீர்க்கமாக முடிவு செய்து, விழுப்புரம் தொகுதியை சண்முகம் கைகழுவி விட்டார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சண்முகம், தன்னுடைய எம்.பி., நிதியில் பெரும் பகுதியை, மயிலம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தாராளமாக ஒதுக்கீடு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடும் நோக்கத்தில் சண்முகம், நேரடியாக களத்தில் இறங்கி எஸ்.ஐ.ஆர்., பணிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். மயிலம் தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க., சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த முறை சண்முகத்தின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிவக்குமார், தற்போது, சண்முகத்திற்காக மயிலம் தொகுதியை விட்டுக் கொடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இதற்கிடையே அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கட்சி தலைமை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், மயிலம் தொகுதியில் பல இடங்களில் வேட்பாளர் பெயர் இல்லாமல், சண்முகத்தின் ஆதரவாளர்கள் பல கிராமங்களில் சுவர்கள், மெயின் ரோடு பகுதியிலுள்ள இரட்டை இலை சின்னங்களை எழுதும் பணியை துவங்கி விட்டனர். மயிலம் தொகுதியில் தி.மு.க., சார்பில் யார் போட்டியிடுவார் என முடிவாகாத நிலையில், அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டு தேர்தல் பணியை துவங்கியுள்ளது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்