விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர்களிடமிருந்து, அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு, அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி முதல்வரால் இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற (2026ம் ஆண்டிற்கு), தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றுபவராக இருத்தல் வேண்டும். தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (http://awards.tn.gov.in) வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவு செய்த பின், அனைத்து ஆவணங்களையும், விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3 நகல் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.