விழுப்புரம் நகரத்தில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, கண்காணிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையடுத்து, மாவட்ட காவல் துறை சார்பில், குற்ற சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்களுடன், புதிய காவல் கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மகாலட்சுமி குழும நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில், திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில் இந்திரா நகரிலிருந்து நான்கு முனை சிக்னல் சந்திப்பு வரை 2 கி.மீ., துாரத்திற்கும்; புதுச்சேரி சாலையில், சிக்னல் சந்திப்பு முதல் பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம், பானாம்பட்டு சந்திப்பு வழியாக கோலியனுார் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரையும் 10 கி.மீ, துாரத்திற்கும்; விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பு முதல் புதிய பஸ் நிலையம் வரை. திருச்சி சாலையில் தந்தை பெரியார் நகர் வழியாக ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை 8 கி.மீ., துாரம் என மொத்தம் 20 கி.மீ., தொலைவிற்கு, 14 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையிலிருந்து பிரியும் நகர்புற சாலைகளில் 86 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 100 கேமராக்களும், கேபிள்கள் மூலம் இணைத்து, விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறது. பெருந்திட்ட வளாக வாயில் பகுதியில், புதிதாக கேமரா கண்காணிப்பு மையத்தை போலீசார் கட்டமைத்துள்ளனர். நகரில் பொருத்தியுள்ள 100 கேமராக்களின் காட்சி பதிவுகள் இந்த மையத்தில் உள்ள மூன்று டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகும். மேலும், இந்த காட்சிகள் தொடர்ந்து பதிவும் செய்யப்படும். விழுப்புரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தியுள்ள கேமரா கண்காணிப்பு மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கேமரா கண்காணிப்பு காவல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் திறந்து வைத்தார். டி.ஐ.ஜி., உமா கேமரா காட்சி பதிவு மையத்தை தொடங்கி வைத்தார். எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா வரவேற்றார். விழுப்புரம் மகாலட்சுமி குழும நிர்வாகிகள் பிரகாஷ், வெங்கடேஷ், மதன்குமார், அஸ்வின்குமார், பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமிஷனர் வசந்தி, ஏ.டி.எஸ்.பி.,கள் தினகரன், இளமுருகன், டி.எஸ்.பி.,கள் ஞானவேல், மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் வசந்த், செல்வநாயகம், பிரகாஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர். நகரத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் 20 கி.மீ., சுற்றளவில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணி நேற்று முதல் துவங்கியது. இதில் உள்ள 14 அதிநவீன கேமராக்கள் மூலம், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை, அவரது வாகன நம்பர் பிளேட் ஸ்கேன் செய்து அவரது முகவரி உள்ளிட்ட தகவலை அறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். நகரில் நடக்கும் குற்ற சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும் என எஸ்.பி., சரவணன் தெரிவித்தார்.
நகரை கண்காணிக்கும் 3வது கண்: கலெக்டர்
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், 'இந்த 3வது கண் மூலம் நகரம் முழுதும் கண்காணிப்பில் கொண்டுவரப்படும். இதனால், தவறு செய்பவர்கள் அச்சப்படுவார்கள். இதில், 14 அதிநவீன கேமராக்களும் உள்ளதால், சாலையில் விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்து, விரைந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது ஒரு ஆரம்ப திட்டம், இனி படிப்படியாக பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அதிவேக பைக் ரேஸ் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.