உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வில் விருப்ப மனுக்கள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வில் விருப்ப மனுக்கள்

கடலூர்:உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் பெற்றுக் கொண்டார்.அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறது.அதன்படி தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து நேற்றும் (7ம் தேதி) வரும் 10ம் தேதியும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.அதன்படி நேற்று காலை கடலூர் நகர தி.மு.க., அலுவலகத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சிகளுக்கும், மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி பேரூராட்சிகளுக்கும், கடலூர் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியங்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர செயலர் தங்கராசு முன்னிலை வகித்தார். விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, முன்னாள் எம்.பி., கணேசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதில் கடலூர் நகர மன்ற தலைவர் பதவிக்கு தற்போதைய சேர்மன் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் குணசேகரன், ராஜா, கோவலன், முன்னாள் நகர செயலர் பத்மநாபன், வக்கீல் சிவராஜ் உள்ளிட்டோரும், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் பதவிக்கு சம்பத்குமார், ரவிக்குமார், அமுதா உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்தனர். இதேப்போன்று பேரூராட்சி சேர்மன், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பலர் விண்ணப்பித்தனர்.பின்னர் பகல் 2 மணிக்கு நெய்வேலியில் உள்ள தொ.மு.ச., அலுவலகத்தில் பண்ருட்டி நகராட்சி, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பேரூராட்சிகள், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி ஒன்றியங்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி பெற்றுக் கொண்டார்.வரும் 10ம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை சிதம்பரம் நகராட்சி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி ஒன்றியங்கள், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிகளுக்கு சிதம்பரத்திலும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரை விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை, கெங்கைகொண்டான், திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள், விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர், நல்லூர் ஒன்றியங்களுக்கும் விருத்தாசலத்திலும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்