| ADDED : பிப் 23, 2024 03:40 AM
விழுப்புரம்: தமிழக அரசின் பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்ட கூட்டம் நேற்று நடந்தது. செயலாளர் டேவிட் குணசீலன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமரவேல், துணைத் தலைவர் மணிகண்டன், இணைச் செயலாளர்கள் மருதமலை, குணசேகரன், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்குப்பின், துணை பொதுச் செயலாளர் சிங்காரம் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆனால், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான அறிவிப்பு, அரசின் வரவு, செலவு அறிக்கையில் தெரிவிக்கவில்லை.சரண்டர் விடுப்பினை மீண்டும் வழங்குதல், அரசு துறையில் 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. துாய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், அரசு அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தற்போது வழங்கி வரும் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு, ஒப்பந்த பணி நியமனம் செய்வதையும், அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணியாற்றி வரும் பல்நோக்கு சுகாதார பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு சிங்காரம் கூறினார்.