| ADDED : நவ 24, 2025 06:15 AM
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் எள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வானுார் தாலுகாவில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எள் சாகுபடி செய்ய ஊக்குவித்திடும் வகையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதைகள், 1 லிட்டர் திரவ உயிர் உரங்கள், 1 கிலோ சூடோமோனாஸ் உயர் ரக காரணிகள், மாங்கனிஸ் சல்பேட் 1 கிலோ போன்ற அனைத்து இடுபொருட்களும் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பிரேமலதா, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி வேளாண் அலுவலர் மஞ்சு, உதவியாளர் விஜயகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாழ்வரசி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.